வெள்ளிக்கிழமை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விரதத்தை எல்லாரும் அனுஷ்டிக்கலாம். குறிப்பாக- திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், திரைப்படத்துறை, நாடகத் துறையில் இருப்பவர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலை ஞர்கள், துணி வர்த்தகர்கள், வியாபாரம் செய்பவர்கள், வெள்ளி- வைர வியாபாரிகள், அரசியல்வாதிகள், ஓவியர்கள், நீதிபதிகள், நெசவாளர்கள், இசைக்கருவிகளைச் செய்ப வர்கள், வடிவமைப்பாளர்கள், கணக்கர்கள், விமானிகள், ஓட்டுநர்கள், ஆயத்த ஆடை தயாரிப்பவர்கள், பங்குச் சந்தையில் இருப்பவர்கள், நறுமணப் பொருட்கள் விற்பவர்கள், அலங்கார ஆடைகள் விற்பவர்கள், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள், தொலைக்காட்சிப் பெட்டி பழுதுபார்ப்பவர்கள்... இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையில் விரதமிருப்பது நல்லது.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருப்பவர்கள், பால்வினை நோயாளிகள், காமம் அதிகமுள்ளவர்கள், சீக்கிரமாக சுக்கிலம் வெளிப்படு வதால் கவலையுள்ள வர்கள், கனவில் சுக்கிலம் வெளியேறுபவர்கள், வாய்வுத் தொல்லை உள்ளவர்கள்- இவர்கள் வெள்ளிக்கிழமையன்று விரதமிருக்க வேண்டும்.
கணவன்- மனைவி உறவு சுமுகமாக இல்லாதவர்கள், பேச்சைக் கேட்காத பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் களும் வெள்ளிக்கிழமையன்று விரதமிருக்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகவோ, அஸ்தமனமாகவோ இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும் போது பிரச்சினை உண்டாகும். பிள்ளை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருக்கும்.
ஜாதகத்தில் சுக்கிரன், ராகுவுடன் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கணவனும் மனைவியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது நோய் ஏற்பட்டு, பணச்செலவு உண்டாகும்.
சுக்கிரனும் செவ்வாயும் சேர்த்திருந்தால்- அதுவும் செவ்வாய் மாரகாதிபதியாக இருந்தால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அடிக்கடி சீதளம் பிடிக்கும். உணவு ஜீரணமாகாது. சிலருக்கு அடிவயிற்றில் நோய் இருக்கும்.
செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் 6-ல் இருந்தால், அவர் பல பெண்களுடன் பழகி, தன் சொத்துகளை இழந்துவிடுவார். பெண்களுடன் சேர்ந்து தொழில் செய்து பணத்தை இழப்பார்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், புதன், சந்திரன், சூரியன் 11-ல் இருந்தால், அவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறு பெண்ணுடன் ரகசிய உறவிருக்கும். அதனால் இல்வாழ்க்கை யில் பிரச்சினைகள் உண்டாகும்.
சுக்கிரன், சனி சேர்ந்திருந்தால் பலருக்கு வீரியத்தில் தோஷம் இருக்கும். பலருக்கு வாரிசுகள் இருக்காது. வீட்டில் எப்போதும் சண்டை போட்டவண்ணம் இருப்பார்கள்.
சுக்கிரன், ராகுவுடன் இருந்து, அதை சனி பார்த்தால், தசாகாலங்கள் சரியில்லாதபோது அவர் பல கஷ்டங்களை அனுபவிப்பார். பணவசதி இருக்காது. திடீரென நோய் தாக்கும். லக்னத்தில் கேது, சுக்கிரன் இருந்து, 7 அல்லது 11-ல் சனி இருந்தால், அவருக்கு தன் மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. அவர்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரன், ராகு, செவ்வாய் 8-ல் இருந்தால் திருமணத்தடை இருக்கும். சிலருக்கு விவாகரத்து நடக்கும். சிலர் விதவையைத் திருமணம் செய்வர். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை இராது.
ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் லக்னம் அல்லது 4, 7, 8, 12-ல் இருந்தால், திருமண வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்கள் இருக்கும். பலருக்குத் திருமணத்தடை இருக்கும். ஆனால், அந்த சேர்க்கைக்கு குரு பார்வை இருந்தால், திருமணத்தடை நீங்கிவிடும்.
ஒரு வீட்டிற்கு தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தால், எந்த காரியத்தைச் செய்தாலும் தடைகள் உண்டாகும். ஏனென்றால் அங்கிருப்பவர்களின் ஜாதகத்தில் ராகு, செவ்வாய், சனி சரியாக இருக்காது. பல நேரங்களில் விபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒருவருக்கு ராகு தசை நடக்கும்போது சுக்கிர புக்தி வந்தால், அந்த ராகுவும் சுக்கிரனும் 8-ஆம் பாவத்தில் இருந்தால், அவர் தான் இருக்கும் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். அவர்மீது வழக்குகள் வரும்.
சூரியன், ராகு, சனி 12-ல் இருந்தால் பித்ருதோஷம் உண்டாகும். வீட்டில் பலருக்கு நோய் ஏற்படும். சிலர் கெட்ட கனவுகளைக் காண்பார்கள். வர்த்தகத்தில் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள். 6-ஆம் பாவத்தில் சனி, 10-ல் செவ்வாய், 8-ல் சந்திரன் இருந்தால் அவர்மீது சூனியம் வைப்பார்கள். நோய் வரும். வீட்டில் சந்தோஷ சூழல் இருக்காது. மனைவி, பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
பரிகாரங்கள்
வளர்பிறையின் முதல் வெள்ளிக் கிழமையில் ஆரம்பித்து 21-லிருந்து 31 வாரங்கள்வரை விரதமிருக்கலாம். காலையில் குளித்து, வெள்ளை நிறப் பசுவை வணங்கி ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளின் கால்களில் விழ வேண்டும். அவர்களுக்கு முழுத்தேங்காயை அளித்து, பூஜையறையில் தீபமேற்றி, பால், தயிர், பால்கோவா, வாழைப்பழம் ஆயிவற்றைப் பிரசாதமாகத் தரவேண்டும். "ஓம் த்ராம் த்ரீம் த்ரோம் ஷ: சுக்ராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். துர்க்கை ஆலயத்தில் ஒரு தீபமேற்றி, சிவப்பு மலர் வைத்துப் பூஜை செய்யவேண்டும். திட்டமிட்ட வாரங்களில் முழுமையாக விரதமிருந்து முடித்தபிறகு ஆறு சிறுமிகளை வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
அழகுப்பொருட்கள், வெள்ளிப்பாத் திரங்களை தானமளிக்க வேண்டும். ஒற்றைக் கண் மனிதரைக் கண்டுபிடித்து, அவருக்கு துணி, உணவளிக்கவேண்டும்.
செல்: 98401 11534